Thursday, 3 May 2012

Ontario Tamil Kids

ஒன்ராறியோ மாகாணத் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் மொழித் திறன்


ன்ராறியோ மாகாணத்தில் உள்ள தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் மொழியில் கல்விகற்பிக்கவும், பயிற்சி பெறவும் பல வகையிலும் தமிழ் பெற்றோர்களும், ஆசிரியர்களும், மற்றும் நலன் விரும்பிகளும் முன்னின்று பாடுபட்டு வருகின்றார்கள். எப்படியாவது எங்கள் தாய் மொழியை இந்த மண்ணில் தக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆதங்கம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணத்தில் என்றும் நிலைத்து நிற்கின்றது. இவர்களுக்குத் துணை புரிவதற்காகப் பல நிறுவனங்களும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தருகின்றார்கள்.

பல மொழி பேசும் மக்கள் உள்ள இந்த நாட்டில் அவர்களின் மொழி பண்பாடு கலாச்சாரத்தைப பேணிக்காப்பதில் அவர்களுக்கு மத்திய, மாகாண அரசுகளும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்கின்றன. எதிர்காலத்தில தமிழ் மொழியும், தமிழ் இனமும் இந்த மண்ணில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அதற்குப் பிள்ளைகளின் தமிழ் மொழித் திறனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தோடு ஒவ்வொருவரும் தம்மால் இயன்றளவு பாடுபடுவதை இந்த நிகழ்வின்போது அவதானிக்க முடிந்தது.


சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் ஒன்ராறியோ மாகாணத்தில் ஒவ்வொரு இனத்தவர்களும் தங்கள் தாய் மொழியைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்டளவு பிள்ளைகள் குறிப்பிட்ட இடத்தில் தாய் மொழிக் கல்வி கற்ற விரும்பினால் அதற்குத் தேவையான ஒழுங்குகளை மாகாண அரசு முறைப்படி செய்து கொடுக்கும். மாணவர்கள் எந்தத் தரத்தில் படிக்கிறார்களோ அதே தரத்தில்தான் தமிழ் மொழி வகுப்புக்கும் செல்ல வேண்டும். தமிழ்ப் பெற்றோர்களைப் பொறுத்தவரையில் புலம் பெயர்ந்த மண்ணில் தங்கள் குழந்தைகள் தாய்மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் மே மாதம் 2009ம் ஆண்டிற்குப்பின் தமிழ் கற்பதில் உள்ள ஆர்வம் தமிழ் மாணவர்கள் மத்தியில் சற்று மந்த நிலையில் குறைந்து இருந்தாலும், இப்போது மீண்டும் பழைய ஆர்வம் மாணவர்களிடையே துளிர்விட்டிருக்கின்றது.


கடந்த நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது போல, சென்ற மாதமும் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மாணவர்களிடையே உள்ள தமிழ் மொழித் திறனை வெளிப்படுத்துவதற்காக ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. சுமார் 1800 மாணவர்கள் வரை தங்கள் மொழித் திறன்களை வெளிப்படுத்துவதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். சென்ற வருடத்தைவிட அதிக மாணவர்கள் விண்ணப்பித்ததில் இருந்து மாணவர்களின் தாய் மொழிக் கல்வியில் உள்ள ஆர்வம் தெளிவாகப் புலப்படுகின்றது. பாலர் கீழ்ப்பிரிவில் இருந்து எட்டாம் தரம் வரையிலான மாணவர்களுக்குத் தங்கள் திறன்களை வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. மிகவும் ஆர்வத்தோடு மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். குறிப்பா இம்முறை பீல் கல்விப்பகுதியில் இருந்து அதிக மாணவர்களும், தன்னார்வத் தொண்டர்களாக ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தது குறிப்பிடத் தக்கது. யங் வீதிக்குக் கிழக்காகவும் மேற்காகவும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களாக இந்த நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்களும், ஒன்ராறியோ கல்விச் சபைகளைச் சேர்ந்தவர்களும் தன்னார்வத் தொண்டர்களாக ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சி திறம்பட நடப்பதற்கு உதவி செய்தனர். இவர்களைவிட பல இளைஞர்களும், யுவதிகளும் தன்னார்வத் தொண்டர்களாக வருகை தந்து போட்டிகளுக்கு வேண்டிய முன் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். சுருங்கச் சொன்னால் எங்கள் மொழி, எங்கள் இனம் என்ற ஒரு கூட்டுக் குடும்பச் சூழ்நிலை ஒன்றை எல்லோரும் சேர்ந்து உருவாக்கியிருந்தனர். எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் எங்கள் மொழியும் இனமும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கவேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு எல்லோரும் ஒத்துழைத்தது மட்டுமல்ல, தங்கள் தாய் மொழியை அடுத்த தலைமுறையிடம் கையளிப்பது என்பதைத் தங்கள் தார்மீகக் கடமையாக நினைத்து அதையும் திறம்பட நிறைவேற்றியிருந்தார்கள்.


ஒன்ராறியோ அரசு தரும் இலவசமான தாய் மொழி கற்கும் திட்டத்தை தமிழ் பெற்றோர்களாகிய நாங்கள் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் மொழியைக் கற்பதற்கு மாணவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்தாவிட்டால் காலப்போக்கில் அவர்கள் அதை ரத்துச் செய்து விடுவார்கள். எக்காரணம் கொண்டும் இந்த வசதிகளை நாங்கள் திரும்பவும் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே உங்களுக்கு அருகாமையில் உள்ள சர்வதேச மொழி கற்பிக்கும் பாடசாலைகளில் நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்து கொள்ள முடியும். பீல் பிரதேச கல்விச்சபையில் தமிழ் மொழி கற்பவர்கள் இணையத்தளத்திற்கூடாக விண்ணப்பிக்க முடியும். ரொறன்ரோ கல்விச்சபையில் கல்வி கற்பவர்கள் செப்டம்பர் மாதத்தின் முதற் கிழமையில் நேரடியாகச் சென்று அருகே உள்ள தமிழ் மொழி கற்பிக்கும் பாடசாலைகளில் விண்ணப்பிக்கலாம். காலதாமதம் செய்யாமல் செயற்றிட்டத்தில் இறங்குங்கள். போதிய மாணவர்கள் இல்லாவிட்டால் வகுப்புகளை ரத்துச் செய்து விடுவார்கள். தாய் மொழி கற்பதில் தமிழ் மாணவர்களுக்கு உள்ள ஆர்வத்தை எக்காரணம் கொண்டும் மூழ்கடிக்காதீர்கள். தங்களுக்குத் தகுந்த முறையில் தாய் மொழிக் கல்வி கிடைக்கவில்லையே என்ற குற்றச்சாட்டை பெற்றோர்கள் மீது எதிர்காலச் சந்ததியினர் வைப்பதற்கு இடம் கொடுக்காதீர்கள். அரசு தரும் இந்த வசதிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்துவது மூலம், புலம் பெயர்ந்த மண்ணில், தமிழ் மொழியை மட்டுமல்ல, எங்கள் பண்பாடு, கலாச்சாரத்தையும் எங்களால் பேணிக் காக்க முடியும். தாய் மொழி கற்பதில் முன்னணியில் நின்ற எங்கள் தமிழ்ப் பிள்ளைகள் இன்று சில பெற்றோரின் அலட்சியத்தால் தமிழ் கற்பதைப் புறக்கணித்ததால், நாங்கள் இன்று இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இலவசமான தமிழ் மொழித் திறன் காணல் போட்டி என்பதால், இம்முறை போட்டிக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் நேரடியாகவே விண்ணப்பிக்கக்கூடியதாக இணையத் தளங்கள் (ontta.org) மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சில பெற்றோர்கள் தொடக்கத்தில் தயங்கினாலும், நவீன தொழில் நுட்பத் துறைக்குள் தங்களையும் மெல்ல மெல்ல அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டார்கள். எங்கள் இனம் எந்த ஒரு நல்ல விடையத்திலும் பின்தங்கி நிற்கக்கூடாது என்பதை அவர்களும் புரிந்து கொண்டதால் தங்களால் இயன்றளவு ஒத்துழைப்பையும் நல்கினார்கள். பிள்ளைகள் மட்டுமல்ல சில பெற்றோர்களும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கணினி அறிவை இதன் மூலம் பெற்றுக் கொண்டார்கள். பாலர் கீழ்ப்பிரிவு, பாலர் மேற்பிரிவு பெற்றோர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாகக் காட்டிக் கொண்டார்கள். தமிழ் மொழித் திறன் காணல் போட்டி என்பதைவிட தமிழ் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் ஒரு நிகழ்வு என்றே இதைக் குறிப்பிட வேண்டும். கடந்த மூன்று மாதங்களாகப் பல தமிழ் பிள்ளைகள் சொல்வுது எழுதுதல், எழுத்தை இனங்காணல், படத்தைப் பார்த்து சொற்கள், வசனங்கள் எழுதுதல், வாசித்தல் போன்ற பல துறைகளில் அதிக கவனம் செலுத்திப் பயிற்சி எடுப்பதில் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டதை அவதானிக்க முடிந்தது. அடுத்த தலைமுறையினர் தங்கள் தாய் மொழியைக் கற்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டியதொன்றாகும்.  விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர, தமிழ் மாணவர்களின் இந்த முயற்சிக்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மனமுவந்து கொடுத்த ஊக்கமும் ஆக்கமும் கட்டாயம் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளி விபரக் குறிப்பின்படி சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் தாய்மொழிக் கல்வி கற்கும் மாணவர்கள் ஏனைய மாணவர்களைவிட அதி திறமைசாலிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. காரணம் என்னவென்றால், அவர்கள் பாடசாலையில் கற்கும் பாடங்களை தமிழில் மாணவர்கள் முற்கூட்டியே கற்றுக் கொள்வதால் ஆசிரியரின் கேள்விகளுக்கு மொழி மாற்றத்தின் மூலம் இலகுவாகப் பதிலளிக்க முடிகின்றது.


குறிப்பாக இந்த மொழித்திறன் காணும் நிகழ்ச்சிக்கு தாமாகவே முன் வந்து ஆதரவுதந்த எல்லா கல்விச் சபைகளுக்கும், பத்திரிகைகளுக்கும், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள், மற்றும் எல்லா தொடர்பு சாதனங்களுக்கும் தமிழ் மக்களின் சார்பில் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்ற மறுக்க முடியாத உண்மையை மீண்டும் உங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பெற்றோர்களுக்கு அவர்களின் தார்மீகக் கடமையை நினைவூட்டுவதன் மூலம் இந்த மண்ணில் எங்கள் இனத்தையும் மொழியையும் கட்டிக்காப்பதில் எம்மால் முடிந்த உதவிகனைச் செய்வோம். இறுதியாக இந்த தமிழ் மொழித் திறன் காணல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறத் தன்னார்வத் தொண்டர்களாக வந்து கலந்து கொண்ட பெற்றோர், மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகூற விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment